×

இஸ்லாமிய வாழ்வியல்: அறச் சீற்றம்

இஸ்லாமிய வாழ்வியல்

“நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்” இன்று நம்மில் எத்தனை பேருக்கு சாத்தியம்? ஏறத்தாழ இன்று அந்தப் பண்பு இல்லை என்றே சொல்லிவிடலாம். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பல்லிளிப்பு, கூழைக்கும்பிடு, கால் கை பிடித்தல் (காக்கா பிடித்தல்) கையூட்டு எனும் அவலநிலைதான் காணப்படுகிறது. ஆனால் இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து வாழ்பவர்களிடம் நேர்மைப் பண்பு குடிகொண்டிருக்கும். அந்த நேர்மைப் பண்பு அவர்களின் நடத்தையிலும் பார்வையிலும் பேச்சிலும் எதிரொலிக்கும்.

வெளியூர் வணிகர் ஒருவர் அழுது புலம்பியபடி நபிகளாரிடம் வந்தார். மக்காவிலுள்ள அபூஜஹல் என்பவன் தமக்குச் சேர வேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றுவதாகவும் தாங்கள் எப்படியாவது அவனிடமிருந்து பணத்தை வாங்கித் தருமாறும் முறையிட்டார்.

நபிகளாரின் மார்க்கப் பணிகளைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவன் அபூஜஹல். ஆகவே இப்போது இந்த வெளியூர் வியாபாரிக்காக நபிகளார் அபூஜஹலிடம் சென்று நியாயம் பேசினால் கடும் மோதல் ஏற்படும்; சுவையான ஒரு சண்டைக் காட்சியை இலவசமாய்க் கண்டு களிக்கலாம் என்று மக்காவாசிகளில் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

வெளியூர் வியாபாரியை அழைத்துக் கொண்டு நபிகளார் அபூஜஹல் வீடு நோக்கி நடந்தார். எப்படி ஒரு நடை தெரியுமா? பாரதி பாடினானே அதே நடை. ஆம்; ஏறுபோல் நடந்து சென்று அபூஜஹலின் வீட்டுக் கதவைத்தட்டினார்.

“யாரது?”
“முஹம்மத்”

கதவைத் திறந்த அபூஜஹல் என்ன செய்தி என்று ஆணவமாகக் கேட்டான்.

“இந்த வெளியூர் வியாபாரியின் பணத்தை மரியாதையாகத் திருப்பித் தந்துவிடு.” கண்டிப்பான குரலில் நபிகளார் கூறினார்.

“கொஞ்சம் இருங்கள்” என்று கூறிய அபூஜஹல் வீட்டுக்குள் சென்று பணத்தை எடுத்து வந்து மறுபேச்சு பேசாமல் அந்த வணிகரிடம் கொடுத்துவிட்டான். நபிகளாருக்கு நன்றி சொல்லிவிட்டு வணிகரும் கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் மக்காவாசிகள் அபூஜஹலைச் சூழ்ந்துகொண்டனர். “வெளியூர் வியாபாரிக்கு ஏன் பணத்தைக் கொடுத்தாய்? முஹம்மதைப் பார்த்து பயந்துவிட்டாயா?” என்று கேலி செய்தனர். அப்போது அபூஜஹல், “முஹம்மதின் தோள்களிலிருந்து இரண்டு சிங்கங்கள் என்மீது பாய்வதற்குத் தயாராக இருந்தது போல் என் கண்களுக்குத் தெரிந்தன. நான் மட்டும் அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் அந்த சிங்கங்கள் என்மீது பாய்ந்தே இருக்கும்” என்றான். நபிகளாரின் ஏறுபோன்ற நடையும் அறச் சீற்றமும் அபூஜஹ்லுக்கு சிம்ம சொப்பனமாய்தான் இருந்திருக்கும்.

– சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“அநீதி இழைக்கப்பட்ட மக்களின் குரலுக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் இறைவனுக்கும் இடையில் யாதொரு திரையும் இல்லை.” (நபிமொழி)

The post இஸ்லாமிய வாழ்வியல்: அறச் சீற்றம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வித்தியாசமான தகவல்கள்